கடந்த சனி கிழமை ஜூன் 30ஆம் தேதி நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2007ஆம் ஆண்டிற்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து இந்தியா டி20 உலக கோப்பையை இரண்டாம் முறை வென்றுள்ளது. மேலும் இது இந்தியா 2013 ஆண்டு வென்ற சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து வெல்லும் முதல் ஐசிசி கோப்பையாகும்.
புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம்
ஆனால் இந்திய அணி இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. பெரிய புயல் காரணமாக திங்கள் கிழமை பார்படோஸில் விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்திய கிரிக்கெட் அணி அங்கு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அங்கிருந்து வரும் தகவல்படி, பார்படோஸில் உள்ள ஹோட்டலில் இந்திய அணியினருடன் தங்கியிருக்கும் ஜெய் ஷா, அவர்களின் பாதுகாப்பான புறப்பாடுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார், மேலும் பார்படோஸில் இருந்து டெல்லிக்கு ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார். இருப்பினும், விமான நிலைய இயக்கம் மீண்டும் தொடங்கிய பிறகே இது சாத்தியமாகும்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை
ஞாயிறன்று, இந்திய வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஜெய் ஷா கூறியிருந்தார். ஆனால் இந்த பரிசு தொகையை யார் யார் பகிர்ந்து கொள்வார்கள் என்பதில் குழப்பம் இருந்தது. அதை ஜெய் ஷா இன்று தெளிவு படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்றதையடுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் ரூ.125 கோடி பரிசுத் தொகையை வீரர்கள், ஆதரவு ஊழியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியா டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, அடுத்த இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வதுதான் என்று ஷா தெரிவித்தார். இந்தியா இதுவரை இரண்டு பதிப்புகளில் WTC ஃபைனலில் விளையாடியுள்ளது, ஆனால் இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடத்தப்படவுள்ளது, WTC 2025 ஃபைனலும் திட்டமிடப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியா வெல்லும். ஜெய் ஷா நம்பிக்கை
“இந்த அணி சிறந்த முறையில் முன்னேறி வருகிறது. எங்கள் அடுத்த இலக்கு WTC ஃபைனல் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபியை வெல்வதுதான்” என்று ஜெய் ஷா கூறினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த மூவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள், எனவே நடை பெற உள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி போட்டிகளில் அவர்களின் அனுபவம் நிச்சயம் உதவும் என்று ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
“வீரர்கள் டி20 போட்டுகளில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றிருப்பதால், இந்த இரண்டு தொடர்களுக்கும் அணி கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். அனுபவம் வாய்ந்த அணியைக் கொண்டிருப்போம், அங்கேயும் நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று ஷா கருத்து தெரிவித்தார்.