டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி வானிலை அறிக்கை. டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி இன்று ஜூன் 29 பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இரு அணிகளும் இந்த T20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இரு அணிகளும் நன்றாக விளையாடி வரும் நிலையில் இறுதி போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இறுதி போட்டி நடைபெறும் பார்படாஸில் இன்றும் (ஜூன் 29) மற்றும் நாளையும் (ஜூன் 30) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் தொடர்ந்து மழை ஒரு இடையூறாக இருந்து வருகிறது. சில போட்டிகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. சில போட்டிகள் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. ESPN Crickinfo அறிக்கை படி, இரு அணிகளின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மழை காரணமாக கிராண்ட்லி ஆடம்ஸ் விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்ததாக தெரிகிறது.
இனி ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆம் தேதிக்கான வானிலை நிலவரத்தை பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி வானிலை அறிக்கை
பார்படோஸின், பிரிட்ஜ்டவுனில் ஜூன் 29 மற்றும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி வானிலை அறிக்கை முன்னறிவிப்பு:
ஜூன் 29 (சனிக்கிழமை):
- பார்படோஸின் வானிலை அறிக்கையின்படி, “மேகமூட்டமாகவும், காற்று படிப்படியாகக் குறைந்து, ஈரப்பதமாகவும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என அக்குவெதர் (Accuweather) தகவல் தெரிவிக்கிறது.
- காலை 6 மணி முதல் 8 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாள் முழுவதும் மழை பெய்ய 51 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
- பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- காலை மற்றும் மதிய நேரங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- விளையாட்டு நடைபெறும் நேரத்தில் (காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை) மேகமூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மழை இல்லாமல் போட்டி தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உள்ளது.
- மழை பெய்தால், போட்டி ரிசர்வ் தினத்திற்கு மாற்றப்படும்.
ஜூன் 30 (ஞாயிறு):
- காலை நேரத்தில் பெரும்பாலும் மேகமூட்டமாகவும், ஈரப்பதமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும்.
- மதிய நேரத்தில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- மதிய நேரத்தில் வானிலை சீர்குலைவு ஏற்படலாம். ஆனால், காலை நேரத்தில் போட்டி தொடர்ந்து நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
மழை காரணமாக போட்டி ஜூன் 29 (சனிக்கிழமை) அன்று கைவிடப்பட்டால், ஐ.சி.சி. ஒதுக்கிய ரிசர்வ் தினமான ஜூன் 30 (ஞாயிறு) அன்று போட்டி நடைபெறும். ரிசர்வ் தினம் பற்றிய ஐ.சி.சி. விதிமுறைகள், “தேவையான ஓவர்கள் குறைக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நாளிலேயே போட்டியை முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் குறைந்தபட்ச ஓவர்கள் வீச முடியாத நிலையிலேயே ரிசர்வ் தினத்தில் போட்டி நடைபெறும்” என்று கூறுகின்றன.
போட்டி முடிவைத் தீர்மானிக்க, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு குறைந்தது 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும், மேலும், நிர்ணயிக்கப்பட்ட நாளில் போட்டி தொடங்கி, பார்படோஸில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், ரிசர்வ் தினத்தில் அதே நிலையிலிருந்து போட்டி தொடங்கும்.
போட்டி முழுவதும் கைவிடப்பட்டால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் டி20 உலக கோப்பையை பகிர்ந்து கொள்வார்கள்.